வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பரந்து கொண்டிருந்தவைதான் பயணிப்புறாக்கள் எனப்படும் காட்டுப்புறாக்கள். இந்தப் புறாக்கள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கினால் அந்த கண்கவர் ஊர்வலம் முடிய பலமணி நேரம் ஆகும்.
1873-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி மிக்சிகன் நாரில் வான் வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புற ஊர்வலம், முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரைசாரையாக பரந்து வந்து கொண்டே இருக்கும் காட்சிகள் அந்நாட்களில் மிக சாதாரணமானவை. அந்த பகுதியே கடும்மேக மூட்டத்திற்கு உள்ளானது போல் மாறிவிடும்.
இப்படி பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு பரந்து பரந்து பரவசப்படுத்தியதுதான் அதற்கு எமனாக அமைந்து. வடஅமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறியபோது அவர்கள் இந்த புறாக்களை தொந்தரவாக நினைத்தார்கள். புறாக்களை வேட்டையாடத் தொடங்கினார்கள்.
இவற்றறை வேட்டையாடுவது எளிதான ஒன்றாக இருந்தது. வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்துக் கொத்தாக புறாக்கள் சிக்கும். துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்டே பல புறாக்கள் இறந்து விழுந்தன. கூட்டமாக பறக்கும் பொது ஒரு கட்டையை வீசி எறிந்தே பல புறாக்களை கொன்றுள்ளனர் மனிதர்கள்.
இந்த பறவைகளை அதிகமாக கொன்று குவித்து ரெயில் மூலம் நியுயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைபெற்றது. புறாக் கறி விலை மலிவாக கிடைத்ததால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. இதனை பயன்படுத்தி முழுநேர வேலையாகவே செய்து புறாக்களை வேகவேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள்.
1855-ல் நியுயார்க் நகருக்கு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சலாக அனுப்பப்பட்டன. 1869-ல் மிக்சிகன் நகரில் இருந்து வடஅமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பொதுவாக ஒரு இந்த வகை பெண்புறா ஆண்டுக்கு ஒரு முட்டைதான் இடும். எனவே அழிக்கபடும் வேகத்திற்கு அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. இதனால் 2௦-ம் நூற்றண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிப்புறா தள்ளப்பட்டது.
உலகில் கடைசி பயணிப்புறாவான மார்த்தா, சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914 செப்டம்பர் 1-ந் தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.
தான் மட்டுமே மேலான உயிரினம் என்ற மனிதனின் எண்ணாத்தால் ஏகப்பட்ட உயிரினங்கள் இன்று உலகில் இல்லை. என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதனால் புதிதாக உயிரினத்தை உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment