Saturday, 19 May 2018

விளையாட்டால் உருவான போர்



  நாடுகளுக்கிடையே நடைபெறும் விளையாட்டு போட்டிகள் பெரும்பாலும் நட்புறவை வளர்க்கவே நடத்தபடுகிறது. ஆனால் சில விளையாட்டுகள் யுத்தத்தில் முடிகின்றன. அப்படியொரு விளையாட்டுதான் 1969-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நடந்தது.

   1970 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கல்பந்தாட்டத்திற்கான தகுதிசுற்று போட்டி, 1969-ம் ஆண்டு நடைபெற்றது. உலக கோப்பையை வாங்குவதற்கு அனைத்து நாடுகளும் கடுமையாக மோதின. அப்படி நடந்த ஒரு போட்டியில் எல் சால்வடார், ஹோண்டுராஸ் என்ற நாடுகளின் அணிகள் மோதின.

   ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது, இரண்டு நாடுகளும் இரண்டு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. அந்த நேரத்தில் ஹோண்டுராஸ் அணியை சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் முரட்டுத்தனமாக விளையாடிய காரணத்தால் அந்த அணிக்கு தண்டனையாக எதிரணியான எல் சால்வடாருக்கு பெனால்டி கிக் தரப்பட்டது. இதன் காரணமாக எல் சால்வடார் அணி மேலும் ஒரு கோல் அடித்து மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

  அப்போது அங்கு இருந்த இரண்டு நாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இது விளையாட்டு அரங்கை கடந்து, இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பரவியது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இரண்டு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் குறை கூறி அறிக்கை போர் நடத்தினார்கள். இது உச்ச கட்டத்தையும் அடைந்தது.

   அதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் போர் மூண்டது. இந்த யுத்தத்தை சரித்திரத்தில் கால்பந்து யுத்தம் என்றும், 100 மணி நேர யுத்தம் என்றும் அழைக்கிறார்கள். ஏனென்றால், இது 1௦௦ மணி நேரத்தில் முடிவுக்கு வந்த யுத்தம். இந்த போரில் 2௦௦௦ போர் வீர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா இரு நாடுகளுக்கும் அளித்து வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியது. இது கிட்டதட்ட பொருளாதார தடை விதித்ததற்கு சமம்.

   இதனால் இரு நாட்டு மக்களும் தங்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல் பட்டினியால் இறக்க தொடங்கினர். கடைசியாக வேறு வழியில்லாமல் போர் முடிவுக்கு வந்தது. ஒரு விளையாட்டு போராக உருமாரி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது சரித்திரத்தில் இதுவே முதல் முறையாக கருதப்பட்டது.

   ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே சில பகைமை உணர்வு இருந்துள்ளது. எல் சால்வடார் நாட்டை விட ஹோண்டுராஸ் ஐந்து மடங்கு பெரிய நாடு. ஆனால் மக்கள் தொகை குறைவு. இயற்க்கை வளம் மிக்க ஹோண்டுராஸ் நாட்டிற்கு, எல் சால்வடார் நாட்டிலிருந்து நிறைய மக்கள் சட்ட விரோதமாக குடியேறினர்கள்

   ஒரு கட்டத்தில் ஹோண்டுராஸ் மக்கள் தொகையில், எல் சால்வடார் மக்கள் 6௦ சதவீதம். என்ற மிதமிஞ்சிய அளவில் இருந்தார்கள். இவை எல்லாம் சேர்ந்து தான் யுத்தமாக மாறியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ விளையாட்டு வினையாகும் என்பது நிரூபணம் ஆகி விட்டது.

No comments:

Post a Comment