Wednesday, 15 August 2018

காப்புரிமை ஏன் பெற வேண்டும்


   உங்களது தயாரிப்புகளை நீங்களே தயாரித்து, நீங்களே விற்பனையும் செய்யலாம். உங்களுடைய பொருளுக்கு அதிக தேவைகள் உருவாகும் போது, அதே போன்று மற்றவரும் காப்பி செய்து விற்பனை செய்யலாம். இதனால் உங்களது உழைப்பு வீணாகும், லாபமும் குறையும், இதை தவிர்க்கத்தான் காப்புரிமை பெறுவது அவசியம். பொருளுக்கு மட்டும் இன்றி வடிவமைப்புக்கும்(டிசைன்) காப்புரிமை பெறலாம்.

   காப்புரிமை அலுவலம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்படுகிறது. காப்புரிமை அலுவலத்தின் தலைமையகம் கொல்கத்தாவிலும், கிளை அலுவலகங்கள் புது டெல்லி, மும்பை, மற்றும் சென்னையிலும் உள்ளன. இதனால் சென்னையிலேயே காப்புரிமை பெறலாம். ஒரு பொருளுக்கு 2௦ ஆண்டுகளுக்கு காப்புரிமை வழங்கப்படும். புதிதாக எந்த ஒரு தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படும். ஏற்கனவே உள்ள பொருட்களில் ஏதாவது மாற்றங்கள் செய்து இருந்தால் அதற்கும் காப்புரிமை பெற முடியும். கண்டுபிடித்த ஒரு வருடத்திற்குள் காப்புரிமை பெறுவது அவசியம் ஆகும்.

   நீங்கள் தயாரித்த பொருட்களுக்கு காப்புரிமை பெறபட்டிருக்கிறதா என்பதை இணையத்தின் உதவியுடன் அறிந்து கொள்ள முடியும். இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை குறித்த தகவல்கள் பற்றிய விவரத்தை ipindia@nic.in என்ற மின்னஞ்சல் மூலமும், சென்னை அலுவலகம் பற்றிய விவரத்தை chennaipatent@nic.in  என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை பெறலாம். Wipo என்ற இணைய தள தேடுதல் மூலம் பிற நாடுகளில் எந்தெந்த பொருட்கள் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

   காப்புரிமை பெறுவதற்கு படிவம் 2-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். இது தவிர படிவம் 1 மற்றும் படிவம் 18-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். ஆண்டுக்கு 40,000 பேர் காப்புரிமை பெற விண்ணபிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டினர். தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக காப்புரிமை பெற முயற்சி செய்கின்றனர்.

   இதேபோல இந்தியாவில் காப்புரிமை பெற்றால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். உங்களுடைய தயாரிப்பு போல மற்றவர்கள் காப்பி அடித்து விற்க முடியாது. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்கவும் முடியாது. வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால், இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள், எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ, அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணபிக்க வேண்டும். இந்தியாவில் காப்புரிமை செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம், அது குறித்த விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.

No comments:

Post a Comment