Wednesday, 8 January 2020

சூரிய சக்திகளின் மகாராணி


    சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் எடுப்பது இன்று சாதாரண விஷயம் என்றாலும் சூரிய சக்தியில் இருந்து அதன் ஆற்றலை பிரித்தெடுத்து முதன் முதலில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மரியா டெல்க்ஸ் என்ற பெண்தான். சூரிய சக்தி இல்லங்கள், சோலார் ஆய்வங்கள் என விரிந்து கடைசியில் சூரிய சக்தியை கொண்டு கடல்நீரை குடிநீராக்கும் கண்டுபிடிப்பையும் நிகழ்த்தினார்.

    ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்ட் என்ற நகரில் 1900ம் ஆண்டு டிசம்பர் 12 அன்று மரியா டெல்க்ஸ் பிறந்தார். தந்தை பெயர் அலதார். தாயார் பெயர் மரியா லாபன்டி டெல்க்ஸ். பெஸ்ட் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் முடித்தார். 1925ல் கிலெவ்லாந்த் கிளினிக்கில் ஆய்வு விஞ்ஞானியாக இவருக்கு வேலை கிடைத்தது. 12 ஆண்டுகள் மனித செல் மாற்றவியல் மற்றும் இதய செயற்கை உதிரி பாகங்கள் மீது தனது கவனத்தை மரியா டெல்க்ஸ் செலுத்தினார். பிறகு வாஷிங்டன் ஹவுஸ் எலெக்ட்ரிகல்ஸ் என்னும் நிறுவனம் அவரை தனது ஆய்வகத்துக்கு அழைத்தபோது தான் முதன் முதலாக சூரியன் பக்கம் அவரது கவனம் சென்றது. 

    1937 ல் மின்சக்தி தொடர்பான ஆய்வின் போது சூரிய சக்தியை மின்சாரமாக மற்ற முடியும் என்ற யோசனை அவருக்கு தோன்றியது. ஆனால் இந்த புதிய யோசனையை அவர் வேலை செய்த நிறுவனம் ஏற்கவில்லை.

    பின் மற்றொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கே சூரிய சக்தியை எவ்வித விரயமும் இல்லாமல் மின்சார சக்தியாக மாற்றும் அறிய கண்டுபிடிப்பை செய்துகாட்டினார். சூரிய சக்தியால் மின்சாரம் பெற்ற வீடு "டோவர் இல்லம்" என்று அழைக்கபடுகிறது. இன்றைக்கும் அந்த வீடு மாஷசெட்டாஸ் டோபர் என்ற இடத்தில் உள்ளது. ஆய்வு மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது.

    இரண்டாம் உலகப் போரின் போது சூரிய அடுப்பு, சூரிய கடிகாரம் என இவரது கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இதனால் இவருக்கு சூரிய சக்தி மகாராணி என்ற பட்டப்பெயரும் வந்தது. 1952ல் சூரிய சக்தியை கொண்டு மிகவும் மலிவான விலையில் கடல்நீரை குடிநீராக மாற்றுதலை கண்டுபிடித்தார். இது மாபெரும் கண்டுபிடிப்பாக போற்றப்பட்டது. 1965ல் விண்வெளி ஆய்வு மையங்கள் தங்களுக்கு தேவைப்படும் மின்சக்தியை சூரிய ஒளியின் மூலமே பெற முடியும் என்ற கண்டுபிடிப்பின் மூலம் விண்வெளி ஆய்வில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தினார், மரியா டெல்க்ஸ்.அமெரிக்க பெண் பொறியாளர் விருது உள்பட பல பரிசுகளை பெற்ற மரியா 1995ம் ஆண்டு டிசம்பர் 2 ந் தேதி புடாஷ்பெட் நகரில் காலமானார்.

No comments:

Post a Comment