சாலையோரத்தில் கைவிரலை உயர்த்தி லிப்ட் கேட்பவர்களை எல்லா வாகன ஒட்டிகளுமே சந்தித்திருப்பார்கள். ஆனால் ஒரு மனிதர் லிப்ட் கேட்டு வாகனத்தில் மாறி மாறி ஏறி உலகையே பைசா செலவில்லாமல் சுற்றி வந்துள்ளார். அவர் தான் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த லுடோவிக் ஹப்ளர்.
இவர் கடந்த தூரம் 17 லட்சம் கிலோமீட்டர், 59 நாடுகள், 1825 நாட்கள். கார்கள், லாரிகள், டிரக், ஒட்டகம், கழுதை சவாரி, படகு என்று தன்னை கடந்து போகும் எந்த வாகனத்திலும் லிப்ட் கேட்க இவர் தயங்கியதில்லை. காசிருந்தால் மட்டுமே பயணம் சாத்தியம் என்பதை கடந்து மற்ற மனிதர்கள் மீது நம்பிக்கை கொண்டு உலகை சுற்றியவர்.
இவருக்கு 1,300 வாகன ஓட்டிகள் லிப்ட் கொடுத்து தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஒரு சில வாகனங்களில் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்துள்ளார். பனிமூடிய ஒரு சாலையில் குளிருடன் நடுங்கியபடி லிப்ட் கேட்டு 26 மணி நேரம் காத்து கிடந்தது தான் அதிக நேரம் லிப்ட்க்காக காத்திருந்தது என்கிறார். வசதியான பெரிய மனிதர்களை விட சாதாரண எளிய மக்களே இவருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர்.
உலகை சுற்றி வரவேண்டும் என்று திட்டம் போட்ட போது லுடோவிக் ஹப்ளர்க்கு 25 வயது. 2003-ம் ஆண்டு ஆல்ப்ஸ் மலையில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் ஒரு நாளைக்கு 1௦ டாலர் செலவு செய்ய வேண்டும் என்று திட்டம் வகுத்து கொண்டார். ஆனால் எந்த காரணம் கொண்டும் தன்னுடைய சொந்த செலவில் வாகனங்களில் பயணம் செய்ய கூடாது என்று தீர்க்கமான ஒரு முடிவு எடுத்து கொண்டார்.
பயணத்தை வெற்றிகரமாக முடித்த லுடோவிக் ஹப்ளர், "அதிகமான மனிதர்களுக்கு அடுத்தவர் மீதனான நம்பிக்கை மிகவும் குறைந்து விட்டது. சாலையில் கடந்து போகும் வாகனங்களில் 80 சதவீதம் வழியில் நிற்கும் மனிதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் நான் லிப்ட் கேட்டு நிற்பதை கண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் அலட்சியமாக கடந்து போயின, அதற்கு காரணம் பயம். வழிப்பறி, கொலை, கொள்ளை எல்லாமே சாலையில் தான் அதிகம் நடக்கிறது. அதையும் கடந்து, அறியாத மனிதர்களுக்கு உதவி செய்ய வருகிறவர்கள் தொழிலாளர்கள், ஏழ்மையான மனிதர்கள் தான். அவர்கள் பல நேரங்களில் தகுமிடமும், உணவும் தந்திருக்கிறார்கள்.
ஐந்தாண்டுகளில் நான் பயணம் செய்த நேரத்தைவிடவும் காத்திருந்த நேரமே அதிகம். 450 இடங்களில் தங்கியிருக்கிறேன். போலீஸ், ராணுவத்திடமும் பிடிபட்டுள்ளேன். இரவு நேரத்தில் சிறையில் தங்க வைக்கப்பட்டேன். சில இடங்களில் வழியில்லாமல் பெண்களை போல பர்தா அணிந்து உதவி கேட்டு பயணம் செய்துள்ளேன்.
எல்லா பயணங்களும் வலிகளும், வேதனைகளும் அவமானங்களும் நிரம்பியதே. அந்த வலியை தாண்டி பயணம் நமக்கும் உண்டாக்கும் அகச் சந்தோசம் இணையற்றது" என்கிறார் லுடோவிக் ஹப்ளர்.
No comments:
Post a Comment