தமிழ் நாட்டின் மாநில விலங்கு எது என கேட்டால் இன்று பலராலும் பதில் கூற முடியாத நிலை தான் உள்ளது. நமது மாநிலத்தின் மாநில விலங்கு வரையாடு. இதனை வரையாடு என்றும், நீலகிரி வரையாடு என்றும் அழைக்கின்றனர். இதனை வருடை என பழங்காலத்தில் அழைத்தனர்.
வரையாடுகள் செங்குத்தான பாறைகளில் வாழும். இதனை வரை என்பார்கள். வரை என்பது மலை உச்சி, குன்று, குவது, பாறை சரிவுகளை உணர்த்துகிறது. இந்த பாறை சரிவுகளில் வாழ்வதால் இதனை வரையாடு என்று அழைக்கின்றனர். அதாவது வரை + ஆடு ஆகிய இரண்டு தமிழ் சொற்களின் இணைப்பே வரையாடு. இது பாறைகளுக்கு அருகே உள்ள புல்வெளிகளில் மேய்ந்துவிட்டு, பாறை இடுக்குகளில் உள்ள குகைகளில் தங்கும். இவை மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவை. மனிதர்களை விட்டு விலகியே வாழுகின்றன.
வரையாடு நீலகிரி மலைக்கு மட்டுமே உரித்தான சிறப்புகளில் ஓன்று. இது மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியான தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இது மிக அருகிய இனமாக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இப்பொழுது அழிந்து வரும் பட்டியலில் இந்த வரையாடு இடம் பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் சில நூறு வரையாடுகள் மட்டுமே உள்ளது.
வரையாடு, ஆட்டின் இனத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. மேலும், இது இமாலயக் காட்டாடு மற்றும் அரேபியன் காட்டாடு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எனவும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டில் இது நீல்கிரிட்ராகுஸ் என்ற புதிய பேரினமாக அறிவிக்கப்பட்டது. வரையாட்டின் விலங்கியல் பெயர் நீல்கிரிட்ராகுஸ் ஹய்லோசிரியஸ் என்பதாகும்.
வரையாடு காட்டாடுகளுடன் தொடர்புடையது. காட்டாடுகளை விட வரையாடு பெரிய உடலமைப்பை கொண்டுள்ளது. இது இமாலய காட்டு ஆடுகளைவிட பெரியது. வரையாட்டில் ஆண் மற்றும் பெண் ஆட்டின் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஆண் வரையாடு பெண்ணைவிடப் பெரியது. இருமடங்கு எடை கொண்டது. வரையாடு தோள்பட்டை வரை உயரம் 110 செ.மீ. இருக்கும். தலையில் இருந்து உடல் நீளம் 150 செ.மீ வரை இருக்கும். பெண் ஆட்டின் உயரம் 80 செ. மீட்டரும், நீளம் 110 செண்டிமீட்டர் நீளமும் கொண்டிருக்கும். ஆண் வரையாடு 80 முதல் 100 கிலோ எடையும், பெண் வரையாடு 50 முதல் 53 கிலோ வரை எடை கொண்டிருக்கும்.
பெண் மற்றும் பருவம் அடையாத ஆண் வரையாட்டின் உடலின் மேல்பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி மங்கலான நிறத்திலும் காணப்படும். ஆண் ஆட்டின் வயது அதிகரிக்க, அதிகரிக்க அதன் உடல் ரோமமும் கறுப்பாக்கிக் கொண்டே இருக்கும். நன்கு வளர்ந்து பருவமடைந்த ஆண் ஆட்டின் பிட்டத்திற்கும், முதுகிற்கு இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படும்.
வரையாட்டின் பேறுகாலம் என்பது 178 நாட்கள் முதல் 190 நாட்கள் ஆகும். வரையாடு ஓன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈன்றெடுக்கும். குட்டிகள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பிறக்கும். இது குளிர் காலம் என்பதால் குட்டியை தாய் தன் அரவணைப்பில் பாதுகாப்பாக வளர்க்கும். முதல் மூன்று மாதங்கள் குட்டிகள் தாய் பாலை குடித்து வளரும். 4 வது மாதம் முதல் திட உணவுகளை உண்ண தொடங்கும். வரையாட்டின் சராசரி ஆயுட்காலம் காடுகளில் 9 ஆண்டுகள் ஆகும்.
ஆண் ஆடுகள் தனியாக இருக்கும். இனப்பெருக்க காலங்களில் பெண் கூட்டங்களில் சேரும். இந்த சமயங்களில் ஆண்களிடையே போட்டி ஏற்படும். ஆளுமையுடைய ஆணே பெண்ணுடன் இணைசேரும். ஒன்றிற்கு மேல் ஆண்கள் இருந்தால் ஆண்களுக்கு இடையே சண்டை ஏற்படும். இரண்டு ஆண்களும் ஒன்றை ஓன்று துரத்தி , தன் தலை மற்றும் கொம்புகளால் முட்டிக்கொள்ளும். இந்த போட்டியில் சில நேரங்களில் ஏதாவது ஒரு ஆண் வரையாடு மரணிக்க கூட நேரிடும்.
வரையாடுகள் ஒய்வு எடுக்கும் போது கூட்டத்தில் உள்ள ஒரு ஆடு உயரமான இடத்தில் இருந்து காவல் காக்கிறது. பெரும்பாலும் பெண் வரையாடு தான் காவல் காக்கும் பணியை செய்கிறது. வரையாட்டிற்கு நல்ல கூறிய கண் பார்வை உண்டு. வெகு தொலைவில் இருந்தே எதிரியை அறிந்து கொள்ளும் திறன் கொண்டது. ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்து சீக்கை ஒலி எழுப்பும். சில நேரங்களில் உரக்க கத்தி தன் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்யும்.
செந்நாய், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன. காடுகள் அளிக்கப்படுவதாலும், திருத்தப்பட்ட காடுகளில் பணப்பயிர்கள் பயிரிடப்பட்டதாலும், இவற்றின் எண்ணிக்கை குறைய தொடங்கின. அது தவிர இதன் வாழ்விடங்கள் பலவாறாக பிளவுபட்டன. கால்நடை மேய்த்தல், மின்சார உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல், வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் இதன் எண்னிக்கை வெகுவாக குறைந்தது.
வரையாடுகள் அழிந்துவரும் விலங்கியல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டது. பல்வேறு வனவிலங்கு தேசிய பூங்காக்களில் வரையாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment