அறிவியல் வளர்ச்சி மனிதனின் தேவையை எல்லையற்றதாக்கி விட்டது. மனிதனின் சுயநலத்தால், பலவகையான விலங்குகள் நிரந்தரமாக அழிந்து வருகின்றன. நமது தேசிய விலங்கான புலியும் அழிந்து வரும் பட்டியலில் தான் உள்ளது. இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், வியட்நாம், மலேசியா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் தேசிய விலங்கு புலிதான். நம்மில் பலருக்கும் சிங்கத்தை பற்றி தெரிந்த அளவுக்கு புலியை பற்றி தெரியாது. அதாவது புலி சிங்கத்தை விட பெரியது. ஒரு வளர்ச்சி அடைந்த புலி 350 கிலோ எடையும். 12 அடி நீளம் வரை வளரும். புலியின் உடலில் காணப்படும் கருப்பு நிற கோடுகள் மனித ரேகையை போன்று ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை. அதன் உடலில் ரோமங்களை நீக்கினாலும், அந்த கருப்பு கோடுகள் காணப்படும். புலிகளின் கோரை பற்கள் நமது கை நாடு விரல் அளவுக்கு இருக்கும்.
ஒரு புலி சராசரியாக 25 ச.கி.மீ பரப்பளவில் வாழும். ஆனால் ஆண்புலி இதைவிட பெரிய இடத்தை எல்லையாக கொண்டிருக்கும். ஒரு ஆண் புலியின் எல்லைக்குள் இரண்டு மூன்று பெண் புலிகளின் எல்லைகள் பரவி இருக்கும். புலிகளுக்கு தண்ணீரில் விளையாடுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. கரையில் அமர்ந்து கொண்டு ஈர உடலில், குளிர்ந்த காற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்து கொண்டிருக்கும். அதுமட்டுமல்ல புலிகள் தண்ணீரில் நன்றாக நீந்த கூடியவை. ஓடும் நீரில் கூட இறையை இழுத்து செல்லும் வல்லமை பெற்றது. வேட்டையின் போது அதிகபட்சம் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் ஓடி சென்று இரையை விரட்டி பிடிக்கும்.
புலிகளுக்கு கூச்சம் அதிகம் அதனால் பெரும்பாலும் தனியாகவே வாழும். சிங்கத்தை போன்று கூட்டமாக வாழ்வதோ அல்லது வேட்டையாடுவதோ கிடையாது. இதுவே புலியின் வாழ்க்கையை கடினமாக்கி விட்டது. அதாவது புலி ஒருமுறை வெற்றிகரமாக வேட்டையாட சராசரியாக 20 முறை முயற்சி செய்கிறது. ஆனால் சிங்கங்கள் கூட்டமாக வேட்டையாடுவதால் 5 முயற்சியில் ஒன்றில் வெற்றி பெறுகிறது. இந்த கூட்டு வாழ்க்கையே சிங்கத்திற்கு வெற்றிகரமான காட்டு ராஜா அந்தஸ்தை பெற்று தந்தது.
பொதுவாக சிங்கங்கள் தாம் வேட்டையாடிய உணவை ஆண் சிங்கம் ருசிபார்த்த பிறகே பெண் சிங்கங்கள் பங்கிட்டு கொள்ளும். ஆனால் ஆண் புலி, தான் வேட்டையாடிய உணவை ஒரே நேரத்தில் பெண் புலியுடன் பகிர்ந்து உண்ணும். புலியின் கர்ப்ப காலம் 3-4 மாதங்கள். குட்டியை ஈன்ற பிறகு 2 ஆண்டுகாலம் தாயின் அரவணைப்பில் வாழும். ஆனால் சராசரியாக 50% புலிக்குட்டிகளே 2 ஆண்டுகளை தாண்டி உயிர் வாழுகின்றன. காரணம், மற்றவை மனிதர்களாலும், போட்டி விலங்குகளாலும், ஆண் புலிகளாலும் கொள்ளப்படுகின்றன.
அறிவியலின் அத்துமீறலால் சிங்கத்திற்கு, புலிக்கும் பிறந்த புது இனம் தான் லைகர் மற்றும் டைகன். இவைகளில் ஆண் சிங்கத்திற்கும் பெண் புலிக்கும் பிறந்த இனம் லைகர். இது தன் பெற்றோர்களை விட பெரிய உடல் வாகு கொண்டது. ஆண் புலிக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறந்தது தான் டைகன். இது தன் பெற்றோர்களின் அளவைவிட சற்று சிறியது.
உயிரியல் காப்பகத்தில் உருவாக்கப்பட்ட இந்த இனங்கள் காட்டு வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல. புலி பொதுவாக மனிதர்களை உணவாக கருதாது. காடுகள் அழிக்கப்படுவதால், காடுகளை விட்டு வெளியேறி, மனிதர்களை தாக்குகிறது. ஆசியாவை தாயகமாக கொண்ட 8 வகை புலி இனங்கள் இருந்தன. இப்போது வெறும் 2 வகை புலி இனங்கள் மட்டுமே உள்ளது அதுவும் அழியும் தருவாயில் உள்ளது.
No comments:
Post a Comment