Monday, 18 May 2020

தேசிய பேரிடர் ஏன், எதற்கு, எப்பொழுது தொடங்கப்பட்டது

     தேசிய பேரிடர் என்றால் என்ன எனபது, இன்றைய நம் மனதில் எழும்பும் பெரும்பான்மையான கேள்வி. இயற்கை சீற்றம் நடந்த இடத்தை ஏன் தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தபடுகிறது என்றால், இந்தியாவில் ஏற்பட கூடிய இயற்கை பேரழிவுகள் முதல் உயிரியல், ரசாயனம், அணுவுலை கதிரியக்கம் முதலான எல்லாவகை பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஆணையம் தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம். 

     1999ம் பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாகஅங்கீகரித்து ஒரு High Power Committee யை இந்திய அரசாங்கம் அமைத்தது. அதன் பின் 2001 குஜராத் பூகம்பத்துக்கு பிறகு, பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்தும், தடுப்பு வழிமுறைகள் குறித்தும் ஒரு தேசிய குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதை சட்டமாக கொண்டு வந்தது கடந்த 2005 ம் ஆண்டில் தான். தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை கொண்டுவரபடுவதற்கு சுனாமி மூலம் நாம் பல உயிர்களை விலையாக கொடுக்க வேண்டி இருந்தது. சுனாமிக்கு பின்னர் தான் அதற்குரிய விழிப்புணர்வு ஏற்பட்டு அந்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. 
     இதன்படி நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் எப்போதும் வைக்கபட்டிருக்கும். அதில் ஒரு பட்டலியன் படை தமிழகத்தில் உள்ள அரக்கோணத்தில் இருக்கிறது. இந்த தேசிய அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் ஏற்றப்பட்டது. ஆனால், பீஹார், ஓடிஸா, குஜராத், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை. 

     ஓர் இயற்கை பேரழிவை, தேசிய பேரிடர் என்று தீர்மானம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறைகள் மற்றும் விதிமுறைகள் எதுவும் கிடையாது. அதை மத்திய அரசே முடிவு செய்கிறது. எதற்காக தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றால், தேசிய பேரிடர் நிவாரண தொகை என்று ஒன்று இருக்கிறது. அதை உடனடியாக பெறுவதற்கு தான் தேசிய பேரிடர் என்று அறிவியுங்கள் என பாதிக்கப்பட்ட மாநிலங்கள் முறையிடும். இது மத்திய அரசு முடிவு செய்ய கூடிய ஒரு விஷயம்.
     தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு நிதியானது, பான் மசாலா, மெல்லும் புகையிலை மற்றும் சிகரெட்டுகள் மூலம் வசூல் செய்யபடும் வரியில் இருந்து ஒரு பகுதி இந்த ஆணையத்திற்கு செல்கிறது. மேலும் எந்த ஒரு தனிநபரோ அல்லது நிறுவனம் கூட இந்த ஆணையத்திற்கு நிதியுதவி அளிக்கலாம். மேலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு பெரும் தொகை இந்த ஆணையத்திற்கு ஒதுக்கபடுகிறது. ஆனால் சமிபத்திய இயற்கை பேரழிவுகளை மத்திய அரசு தேசிய பேரிடர் என்று அறிவிக்காமல் கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவிக்கிறது.

     இதன் காரணம், தேசிய பேரிடர் என்று அறிவிப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்கும் முழு தொகையையும் மத்திய அரசு கொடுக்க நேரிடும். அதனை தடுக்கவே கடுமையான இயற்கை பேரழிவு என அறிவிக்கபடுகிறது. இப்படி அறிவிப்பதன் மூலம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையும். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகை மட்டுமே பெற முடியும். எனவே தேசிய பேரிடர் என்பது உடனடியாக அந்த நிவாரண தொகை பெறுவதற்கு மட்டுமே.

No comments:

Post a Comment