கீழே கிடைக்கும் ஒரு பொருளைக் காலால் உதைத்து மகிழும் பழக்கம், ஆதிகால மனிதர்களிலிருந்து இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தொன்று தொட்டு நிலவி வரும் ஒரு சிறிய மகிழ்ச்சியான செயல் என்று சொல்லலாம்.
காலால் பந்தை உதைத்து விளையாடும் ஆட்டம் என்றதும், எங்கள் நாட்டிலும் இது போன்ற ஒரு அமைப்புள்ள விளையாட்டு இருக்கிறது என்று அனைத்து நாடுகளும் கூறிக்கொண்டு, விளம்பரப்படுத்தியதே தவிர, இது தான் ஆதாரம், இப்படி தான் இருந்தது என்று எந்த நாடும் உறுதியாக வெளியிடவில்லை. இந்த கால்பந்தாட்டத்திற்கு ஒரு முறையான வரலாற்று வடிவமானது கி.பி.11ம் நூற்றாண்டிற்கு பிறகு, இங்கிலாந்திலிருந்தே கிடைத்தது.
கி.பி.1016 - 1042க்கிடையே இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சி ஓன்று என்னவென்றால், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஓன்று சேர்ந்து பழைய போர்க்கள பகுதி ஒன்றை அகழ்வராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு மண்டை ஓடு கிடைத்தது. அந்த மண்டை ஓடானது, இங்கிலாந்தை கொடுமையுடன் ஆண்டுவிட்டுச் சென்ற டென்மார்க் நாட்டின் ஒருவனது மண்டை ஓடாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பிய ஒருவன், அதை வெறுப்புடன் உதைத்து தள்ளப்போய், மற்றவர் மறுபுறம் இருந்து திரும்பி உதைக்க, இப்படியே உதைத்தாடும் பழக்கம் அவர்களை தொற்றி கொண்டது.
எதிரியின் மண்டை ஓட்டை உதைக்கும் வெறி மக்களிடையே அதிகமாகிக்கொண்டே போனது. புதிய புதிய மண்டை ஓடுகள் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த விளையாட்டுக்கு 'டேன் மண்டை ஓட்டை உதைத்தல்' (Kicking The Dane's Head) என்ற பெயரை வைத்தனர்.
மண்டை ஓட்டை உதைப்பதால் காலில் வலியும் எரிச்சலும் ஏற்பட்டது. இதனால் காலணி அணிந்து விளையாடினர். இருந்தும் வலியின் தாக்கம் குறையவில்லை. இருந்தாலும் இந்த விளையாட்டை தவிர்க்க முடியாமல், இந்த விளையாட்டின் மீது அதிக பாசமும் பற்றும் கொண்டிருந்த ஒரு இளைஞன், காற்றடைத்த பசுத்தோல் பை ஒன்றை கொண்டு வந்தான். அந்த பை பார்ப்பதற்கு பந்து போன்று இருந்ததால், உதைத்து விளையாட எளிதாக இருந்தது. இதனால், மண்டை ஓடு மறக்கப்பட்டு, பசுத்தோழ் பை பந்தாக மாறியது. இந்த விளையாட்டிற்கு தோழ்பை உதைத்தாடல் (Kicking The Bladder) என்று பெயர் வைத்தனர்.
கி.பி. 12ம் நூற்றாண்டிற்கு பிறகு பந்தும் விளையாட்டும் ஒரு முறையான அமைப்பை பெற்ற பிறகு, காலால் மட்டுமே உதைத்தாடும் தன்மையில் அமைந்ததால் புட்பாலி (Fut Balle) என்று அந்த காலகட்டத்தில் புது பெயர் நிலவி வந்தது. அன்றைய ஆங்கில சொல்லே பிறகு மாறி Foot Ball ஆகி விட்டது. விளையாட்டு சட்டத்திற்குட்பட்டு, மென்மையும், மேன்மையும் உருவானது போலவே, காலால் மட்டுமே விளையாட வேண்டும் என்ற கட்டுத் திட்டத்தின் கீழ் 'கால்பந்தாட்டம் ' என்று பெயர் பெற்றது.
No comments:
Post a Comment