Monday, 23 November 2020

மரண வாக்குமூலம் எப்பொழுது ஏற்றுகொள்ளபடும்



   பல வழக்குகளின் போக்கையே, திசை திருப்பி விடும் சக்தி, மரண வாக்கு மூலத்துக்கு உள்ளது. இந்திய சான்று சட்டம் 1872 பிரிவு 32ன் படி, மரண வாக்கு மூலத்தை, ஏற்று கொள்ள கூடிய வாக்கு மூலமாக கருதலாம் என்று சட்டம் சொல்கிறது.

   ஒருவர் இறக்கும் போதோ, இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போதோ, கொடுக்கும் வாக்கு மூலமே மரண வாக்குமூலம். தனது இறப்புக்கு யார் காரணம், எப்படி தாக்கினார்கள், என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள் என்று இதில் விளக்கமாக கூறுவார்கள். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர், தனது வாக்கு மூலத்தை, மருத்துவமனையில் கொடுக்கலாம். அல்லது தாக்கப்பட்ட இடத்திலேயே கூட கொடுக்கலாம். எங்கு மரண வாக்குமூலம் கொடுத்தாலும் செல்லுபடியாகும். யார் தூண்டுதலும் இல்லாமல் தானே முன்வந்து கொடுப்பது தான் மரண வாக்குமூலம்.

   சிகிச்சை அளிக்கும் மருத்துவர், காவல் துறை அதிகாரி, குற்றவியல் முன்னிலையில் கொடுக்கலாம். வாக்குமூலம் கொடுக்கும் நபரின் உயிர் நீடிக்கும் என்றால், காவல் துறையினர், குற்றவியல் நடுவரை அழைத்து வந்து வாக்குமூலம் பதிவு செய்வார்கள். தாசில்தார் கூட மரண வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். சில நேரங்களில், இரண்டாவது முறை மரண வாக்குமூலம் கொடுக்கக்கூடிய சூழ்நிலை கூட வரும். முதலில் டாக்டரிடமோ, காவல் துறை அதிகாரியுடனோ, உடனடி வாக்குமூலம் கொடுப்பார். பின்னர் குற்றவியல் நடுவர் முன்பும் கொடுப்பார். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கு மூலங்கள் ஒன்றோடொன்று ஒத்து போகும் பட்சத்தில் அந்த மரண வாக்குமூலம் ஏற்கப்படும்.

   ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தால், அந்த வாக்குமூலத்தை நீதிமன்றமே நிராகரித்து விடும். ஒருவேளை, மரண வாக்குமூலம் கொடுத்தவர் உயிர்பிழைத்துவிட்டார் என்றால், அந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் சத்தியப்ரமாணம் செய்து குற்றம் பற்றி கொடுத்த வாக்குமூலமாக கருதப்படும். இதன் மேல் குறுக்கு விசாரணையும் நடைபெறும். மரண வாயிலில் இருக்கும். ஒருவர் கொடுக்கும் வாக்கு மூலம். உண்மையாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லாரிடமும் உள்ளது. இருந்தாலும் இது எல்லா நேரங்களிலும் உண்மையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பொய்யான மரண வாக்குமூலங்களும், மற்றவர்களை பழிவாங்குவதற்காக கூட கொடுக்கலாம். குற்றம் செய்யாதவர்களை உள்நோக்கத்தோடு சம்பந்தபடுத்தியும், மரண வாக்கு மூலம் கொடுக்கலாம்.

   இதனை குறுக்கு விசாரணையும் செய்யமுடியாது. ஏனென்றால், வாக்குமூலம் கொடுத்தவர் உயிர் பிழைத்து இருந்தால் மட்டுமே இதெல்லாம் செய்ய முடியும். மரண வாக்குமூலம் குறுக்கு விசாரணை செய்யமுடியாத ஒரு சான்று. இதை அப்படியே என்று கொண்டால், ஒரு நிரபராதி, குற்றவாளியாக தண்டிக்கபடலாம். இதற்கா தான் கண்ணை மூடிக்கொண்டு மரண வாக்கு மூலத்தை என்று கொள்வதில்லை. மரண வாக்குமூலத்திற்கு சம்பந்தப்பட்ட சான்றுகள் சமர்பிக்க வேண்டும்.

   அந்த சான்றுகள் மரண வாக்குமூலத்தின் மூலம் உறுதிபடுகிறதா என்று ஆராயப்படும் அவ்வாறு உறுதி படுத்தினால் தான், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கில் இருந்து தண்டனை வழங்கப்படும்.

No comments:

Post a Comment