தமிழகத்தில் இன்றைக்கு யாரை எடுத்து கொண்டாலும், நாங்கள் ஆண்ட சாதி, நாங்களே ஆண்ட பரம்பரை என்ற பெருமையை திரும்ப திரும்ப பேசியும் எழுதியும், திருமண விழாவில் தொடங்கி துக்க வீடுகள் வரை சாதியானது மக்களை விடாது துரத்துருகிறது. வட மொழி இலக்கியங்களான ப்ராமினிய ஸ்மிருதிகள் சொல்வது சாதி பிரிவுகள் அல்ல சாதிய ஏற்றதாழ்வுகள் தான். அதாவது பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர். சங்க தமிழ் இலக்கியங்கள் சொல்லும் பிரிவுகள் என்பது அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்பதே ஆகும். இரண்டுக்கும் பல வேறுபாடுகள் உள்ளது.
ஆதிகால தமிழர்களின் சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வேதம் கற்பிப்பதும் அல்ல உயர்வு தாழ்வு பாராட்டுவதும் அல்ல. அது நிலம் மற்றும் வாழ்வியல் தொடர்பான கூட்டத்தின் அடையாள பேராக மட்டுமே இருந்தது. குறிஞ்சியில் வாழ்ந்தவர்கள் குறவர்கள் என்றும், முல்லையில் வாழ்ந்தவர்கள் இடையர்கள் என்றும், மருதத்தில் வாழ்ந்தவர்கள் பள்ளர்கள் என்றும், நெய்தல் நிலத்தில் வாழ்ந்தவர்கள் பரதர்கள் என்றும், பாலையில் வாழ்ந்தவர்கள் மறவர்கள் என்றும் அழைக்கபட்டார்கள். இந்த ஐந்திணைகளில் அடையாளபடுத்தபடும் அனைவரும் ஓரினத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் நிலம் வாழ்க்கை முறை தொடர்பாக, அவர்களை அடையாள படுத்த காரண பெயர்களாக அமைந்தவை தான் குறவர், இடையர், பள்ளர், பரதர், மறவர் போன்ற பெயர்களேல்லாம்.
அதன் பின் நாகரீகங்கள் வளர வளர வாழ்வியல் பரிணாமங்கள் வளர்ச்சி பெற தொடங்கின, தொழில்கள் அடிப்படையில் மக்கள் தங்கள் வசதிக்காக, தாங்களே குழுக்களாக சேர்ந்து வாழ தொடங்கினர். குந்தம் என்ற ஆயுதத்தை ஏந்தி போருக்கு செல்பவர்களை செங்குந்தர் என்று அழைக்கபட்டார்கள். அரண்மனையில் காவல் செய்தவர்கள் அகமுடையார் என்றழைக்கபட்டார்கள். போர் பயிற்சி வழங்கிய வீரர்கள் சான்றார்கள் என்றழைக்கபட்டார்கள். அவர்களே பின்னாளில் சாணர்கள் என்றானார்கள். கடற்படைகளில் பரதர்களும், சேனை தலைவர்களும் வழி நடத்தினார்கள். வேளாளர்கள் சாதாரண காலங்களில், வேளாண்மையும், போர் காலங்களில் வாழ் ஏந்தி போரும் செய்தார்கள். மறவர்கள் எதிரி படையை முன் நின்று எதிர் கொண்டார்கள். ஆக, போர் காலங்களில், அனைத்து குடிகளுமே தங்களது பங்களிப்பை செய்து வந்துள்ளனர் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
அப்படியானால் யார்தான் ஆண்ட சாதி. உண்மையில் தமிழரில் ஆண்ட சாதி என்ற ஒன்றே கிடையாது. காரணம் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் அவர்கள் காலத்தில் பிறப்பு வழி சாதி என்பதே கிடையாது. தொழில்வழி குடிகள் மட்டுமே இருந்தன. தகப்பன் வேளாண்மை செய்யும் வேளாளராக இருந்தால், மகன் தனது விருப்பத்துக்கு ஏற்ப கம்மாளராக இருக்கலாம். ஒரே குடும்பத்தில் தொழில் வேறுபாடு காரணமாக, பல சமூகம் இருக்கும் வாய்ப்புகளே அதிகம் இருந்தன. மூவேந்தர்கள் கூட இப்போது இருக்கும் தமிழ் சமூகத்தை போல அகமான முறைப்படி திருமணம் செய்தவர்கள் அல்ல. சோழர்கள் தெலுங்கர்கள் உடன் திருமண உறவு வைத்திருந்தார்கள். சேரர்கள் பாண்டியர்களுடன் திருமண உறவு வைத்திருந்துள்ளார்கள்.
மற்ற தேசத்து அரசுகளுடன் திருமண உறவு வைத்திருந்தார்கள் நம் தமிழ் மன்னர்கள். அகமான முறைப்படி திருமணம் நடக்கவில்லை என்றால் அங்கு பிறப்பு வழி சாதி இல்லை என அர்த்தமாகிறது. பிறப்பு வழி சாதியின் அடிப்படையில் மூவேந்தர்கள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதால், போரில் வெற்றி பெற்றதால் மட்டுமே மன்னர் ஆனதாலும், இந்த சாதி தான் ஆண்ட சாதி என்று எவரையும் கூற முடியாது. ஒருவர் இந்த சாதி என்பதற்காக மட்டுமே மன்னன் திருமண உறவு வைத்ததாக வரலாறு எங்கும் இல்லை. வேற்று இன வேற்று தேசத்து பெண்ணாக இருந்தாலும், அரச குடும்பத்தை சேர்ந்தவரா தன்னுடைய அரசுடன் நட்பு பாராட்டுவாரா என்பதை கருதியே அன்றைய அரச குடும்பகளிடையே திருமண உறவு நடந்திருக்கின்றன. மன்னர்கள் அனைவருமே, சாதி கடந்தே திருமணம் செய்து வாரிசுகளை உருவாக்கிவர்கள்.
எனவே தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் சாதி இது தான், இவர்கள் மட்டும் தான் ஆண்ட சாதி என்று எவரையும் குறிப்பிட்டு கூற முடியாது. தமிழர்களிடையே அகமான முறையை கட்டயாபடுத்தியது, விஜய நகர அரசர்கள் தான். அதற்கு பிறகு தான் இங்கு பிறப்பு வழி சாதிகள் உருவாகிறது. இப்போது தந்தை என்ன சாதியோ, மகனும் மகளும், அதே சாதி தான். எனவே தமிழ் என்கிற பொது மொழியை பேசி வந்த பல்லாயிரம் பழமை வாய்ந்த தொல்குடி சமூகம் என்பதை உணர்ந்து, இடை வந்த சாதியை தூக்கிபிடிக்காமல் தமிழராய் வாழ்வோம்.
No comments:
Post a Comment