Thursday, 29 April 2021

எமலோகம் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?


      ஒரு மனிதன் இறந்த பிறகு, சொர்க்கம் அல்லது நரகத்துக்கு செல்வான் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஒரு ஆன்மா நரகத்திற்கு போனால், அங்கு எந்த மாதிரியான துன்பப்படும் என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது இறப்பிற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்கு முன்பு அந்த ஆன்மாவிற்கு என்ன ஆகிறது. அது இங்கு இருந்து எப்படி, எவ்வளவு காலத்தில் எமலோகம் செல்கிறது, எமலோகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது. இதற்கு இடையில் நடக்கும் துன்பங்கள் என்ன என்பதை பல தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

     மனிதனின் இறப்புக்கு பிறகு நடக்கும் நிகழ்வுகளை நமக்கு விரிவாக கூறுகிறது கருட புராணம். அதன் படி ஒரு மனிதனின் ஆயுள் காலம் முடிந்த பிறகு. அவனது ஜீவனை பிரித்து வரும்படி தூதர்களிடம் கூறுவார் எமதர்ம ராஜா. விகாரமான 3 வகை தூதர்கள் அந்த ஜீவனை காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து எமலோகத்திற்கு அழைத்து செல்வார்கள். எமலோகம் என்பது இங்கிருந்து, 86 ஆயிரம் காத தூரத்தில் உள்ளது. ஒரு காத தூரம் என்பது 7 கிலோமீட்டர் ஆகும். அப்படி பார்த்தால், 86,000 காத தூரம் என்பது 6,02,000 கிலோமீட்டர். இவ்வளவு தூரத்தை சில நொடிகளில் கடந்து அந்த ஜீவனை எமலோகத்திற்கு அழைத்து செல்வார்கள் அந்த தூதர்கள். அதன் பிறகு அந்த ஜீவன் எமதர்ம ராஜா முன்பு நிறுத்தப்படும். அப்பொழுது எமதர்மராஜா "ஏ கிங்கலர்களே இந்த ஜீவனை மீண்டும் கொண்டுபோய் அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு, 12ஆம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் சபை முன்பு நிறுத்துங்கள்" என்று கட்டளையிடுவார்.


       உடனே அந்த தூதர்கள் நொடி பொழுதில் அந்த ஜீவனை அதன் இல்லத்தில் விட்டுவிட்டு செல்வார்கள். ஆவியாய் இருக்கும் அந்த ஜீவன் இடுகாட்டில் தனது உடல் அடக்கம் செய்வதை கண்டு அலுத்து ஓலம் இடுமாம். அதன் பிறகு இடுகாட்டில் இருந்து வந்து, தான் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று பசி தாகத்தால் பீடிக்கப்பட்டு கதறி நிற்குமாம். அதனை தொடர்ந்து அந்த ஜீவனின் பிள்ளைகள் அதற்கு கொடுக்கும் பிண்டத்தை உண்டு பத்து நாட்களில் பிண்டத்தால் ஆனா சரீரம் அந்த ஜீவனுக்கு முழுமையாக உருவாகும். 12 நாளில் தனது பிள்ளைகளால் செய்யப்படும் காரியத்தன்று, பிண்டத்தை உண்டு 13 ஆம் நாள் மீண்டும் எமதூதர்கள் வந்து அந்த ஜீவனை பாசகயிரால் கட்டி அழைத்து செல்வர். 

     அச்சமயத்தில் அந்த ஜீவன் தனது வீட்டை திரும்பி திரும்பி பார்த்து கதறி அலுத்து கொண்டே எமலோகம் செல்ல துவங்கும். ஆனால் முன்பு போல இப்போது ஒரு நொடியில் எமலோகம் வந்துவிடாது. இங்கிருந்து அந்த ஜீவன் நடந்தே எமலோகம் செல்லவேண்டும். ஒரு நாளைக்கு 247 காத தூரம் இரவு பகலாக நடந்து செல்லவேண்டும். அப்படி செல்லும் வழியெங்கும், பாதை மிகவும் கரடுமுரடாக இருக்கும். தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் தான் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து, துன்பத்தில் பசியாலும், தாகத்தாலும், மெலிந்து சோர்வுற்று இளைத்து ஐயோ என்று அலறியவாறே, எம தூதர்களிடம் அடிபட்டும் உதைபட்டும் செல்லுமாம் அந்த ஜீவன். இந்த பூலோககத்தில் எப்படி நகரங்கள் பல இருக்கிறதோ, அதேபோல் இங்கிருந்து எமலோகம் செல்லும் வழியிலும் பல நகரங்கள் இருக்குமாம்.

      அந்த ஜீவன் இறந்த 28 ஆம் நாளில், பூமியில் அதன் புதல்வனால் செய்யப்படும் பிண்டத்தை உண்டு 30 ம் நாளில் யாம் யகம் என்ற நகரத்தை அடையுமாம். இப்படி அடுத்தடுத்த மாதங்களில் தன் புதல்வனால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்டு அவ்யாமியம், சௌரி, குருரபுரம் ஆகிய நகரங்களை கடக்குமாம் அந்த ஜீவன். அடுத்ததாக கிரௌஞ்சம் என்ற ஊரை அடைந்து 6 வது மாதத்தில் தன் மகன் தரும் பிண்டத்தை உண்டு தன் வாழ்வில் நிகழ்ந்ததை நினைத்து புலம்பி தவிக்குமாம் அந்த ஜீவன். உடனே அங்கு இருக்கும் எமதூதர்கள் அந்த ஜீவனின் வாயிலே அடிப்பார்களாம்.


     அப்படியே வருத்ததோடு அங்கிருந்து செல்கையில் கோர ரூபம் உடைய பல்லாயிர படகோட்டிகள் அதன் முன்பு ஓடிவந்து நீ வாழ்வில் பசு தானத்தை செய்து இருக்கிறாயா, அப்படி செய்து இருந்தால், அடுத்து கடந்து செல்ல கூடிய வைதரலி நதியை எளிதே கடக்க நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லையேல் சாக்கடையை விட ஆயிரம் மடங்கு மோசமான அந்த நதியில் உன்னை தள்ளி நாங்கள் மூழ்கடிப்போம். ரத்தம், சிறுநீர், மலம் என அனைத்தும் கலந்து இருக்கும் அந்த நதியில் நீ மூழ்கி அதை கடக்க வேண்டும் என்பார்களாம். ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் பசு தானம் செய்வதன் மூலம், அவனது ஜீவன் வைதரலி நதியை எளிதில் கடக்கலாம். பசு தானம் என்பது முழு மனதோடு செய்திருக்க வேண்டும். அதேபோல் அந்த பசுவை பாசத்தோடு கவனித்துகொள்ளும் ஒரு எளிய மனிதருக்கே அந்த தானமானது வழங்கபட்டு இருக்க வேண்டும்.

     ஒருவேளை அந்த ஜீவன் பூமியில் இருந்த காலத்தில் அந்த தானத்தை செய்யாமல் இருந்த காலத்தில் அவனுடைய மகன் அதை செய்திருந்தால் அதன் பலன் அந்த ஜீவனுக்கும் கிடைக்கும். அதன் மூலம் அந்த ஜீவன் வைதரலி நதியை எளிதில் கடந்து யமனுக்கு இளையோனாகிய விசித்திரனுடைய பட்டணத்தை அடையும். அதன் பிறகு தனது புதல்வன் படைக்கும் பிண்டத்தை உண்ணும் போது, அங்கு பல பிசாசுகள் பயங்கர தோற்றத்துடன் தோன்றி அந்த ஜீவனை பார்த்து அடேய் மூடனே, நீ பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் யாருக்குமே தானம் செய்யாமல் இருந்திருந்தால், உனக்காக உன் புதல்வன் மாதந்தோறும் படைக்கும் அன்னமானது உன் கைக்கு கிடைத்து அதை நீ ஆவலோடும் பசியோடும் புசிக்க துடிக்கும் போது பிசாசுகள் அதை புடுங்கி செல்லும் என்று கூறி தானம் செய்யாத ஜீவன்களுக்கு படைக்கும் பிண்டங்களை அந்த பூதங்கள் புடுங்கி கொள்ளும். அதன் காரணமாக அந்த ஜீவன் தான் வாழ்ந்த காலத்தில் செய்த இழிவான செயல்களை எண்ணி அழுது கொண்டே அந்த இடத்தை கடக்கும். 

     இப்படி ஏழு மாதங்கள் கடந்தபிறகு பூலோகத்தில் அந்த ஜீவனை நினைத்து அதற்குரிய அன்ன தானம் செய்யவேண்டும். அந்த ஜீவன் துக்கதம், அதத்தம், சீதாப்ரம், உள்ளிட்ட நகரங்களை கடந்து, 12வது மாதம் முடிந்த பிறகு, தனக்குரியோர் படைக்கும் பிண்டத்தை உண்டு எமபுரி பட்டினமான வைவஸ்வத பட்டினம் அடையும். அங்கு அந்த ஜீவனின் பாவ புண்ணியங்களை எடுத்துரைப்பதற்காக 12 பேர் இருப்பார்கள். அவர்களை 12 சிரவணர்கள் என்று அழைப்பார்கள். அவர்கள் அந்த ஜீவனின் பாவ புண்ணியங்களை எமதர்ம ராஜா அவர்களிடம் எடுத்துரைத்த பிறகு அதற்கு ஏற்றார்போல் அந்த ஜீவனுக்கு தண்டனை கிடைக்கும்.

     நல்லது செய்யாத ஒரு ஆன்மா இறந்த பிறகு அது எமலோகத்தை அடையவே ஒரு வருட காலம் ஆகிறது. அதற்குள்ளாகவே அந்த ஆன்மா பலவிதமான கஷ்டங்களை அனுபவித்துவிடுகிறது.

No comments:

Post a Comment