Saturday, 29 May 2021

கேரளா சட்டமன்றத்தில் தமிழ் மொழியில் பதவியேற்ற MLA

     கேரளாவில் ஆளும் பினராய் விஜயன் தலைமையிலான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டம் தேவி குளம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வழக்குரைஞரான A.ராஜா தனது தாய் மொழியான தமிழில், MLA வாக பதவியேற்றது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

     கேரளாவில் நடந்த சட்டப்பேரவை வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது பினராய் விஜயன் தலைமையிலான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த நிலையில் கேரளாவில் 15 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்,  தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுடன், கடந்த மே 24 ம் தேதி நடந்தது. 

     அப்போது நடந்து முடிந்த தேர்தலில், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தொகுதியில் இருந்து போட்டியிட்டு 51 சதவீத வாக்குகளை பெற்று, வெற்றிபெற்ற ஆளும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழரான ராஜாவும் பதவியேற்றுக்கொண்டார். அவர்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளரை விட 7848 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து மே 24 ம் தேதி நடப்பு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பதவியேற்ற ராஜா தமிழ் மொழியில் பதவி ஏற்றது பலரையும் வியப்பில்  ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு தொலைகாட்சியில்  நேரடியாக ஒளிபரப்பான நிலையில் அவற்றை பதிவு செய்த பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


      இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சோ.வெங்கடேசன், "கேரளா சட்டமன்ற தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா அவர்கள் தனது தாய் மொழியான தமிழ் மொழியில் உறுதி மொழி கூறி பதவியேற்றார், அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்" என தெரிவித்தார். 

     கேரளா சட்டமன்றத்தில் தமிழ் மொழியில் பதவியேற்றது தொடர்பாக A.ராஜா அவர்கள் கூறியதாவது, திருப்பூர் தேனீ ஆகிய தமிழ் நாட்டின் மாவட்டங்களோடு  எல்லையை பகிர்ந்து கொள்ளும் மற்றும் ஏராளாமான தமிழ் மக்கள் வாழும் தேவிகுளம் தொகுதியில் பிறந்து வளர்ந்த நான் என் தாய் மொழியாகிய தமிழ் மொழியில், வேறுஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் பதவியேற்றத்தை பெருமையாக கருதுகிறேன் என்று  கூறினார். தமிழ் மொழியில் பதவியேற்பது எனது தனிப்பட்ட ஆர்வம். அதற்காக கேரளா சட்டமன்ற செயலாளரிடம் முன்னரே விருப்பம் தெரிவித்து அனுமதியும் பெற்றுவிட்டேன். இது மட்டுமின்றி எனது தொகுதியில் மலையாளம் பேசும் மக்களுக்கு ஈடான அளவில் பல்லாயிரம் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். 


     அவர்களின் பிரதிநியாக தமிழ் மொழியில் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சியே என்று கூறிய ராஜா, தனது பள்ளி கல்வி முதல் சட்ட கல்வி வரை முழுவதும் தமிழ் வழியிலேயே பயின்று வந்ததாகவும் கூறுகிறார். நான் மட்டும் அல்ல எனது பெற்றோரும் தேவிக்குளத்தில் தான்  பிறந்தனர். எனினும் எங்களது தமிழ் மொழியுடனான பிணைப்பு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக நான் கேரளாவில் பள்ளி கல்வி முழுவதையும் தமிழ் வழியில் தான் படித்து முடித்தேன். இதை தொடர்ந்து கோயம்பத்தூர் அரசு சட்ட கல்லூரியில் சட்டம் பயின்ற போதும் தமிழ் மொழியில் தான் படித்தேன் என்று பெருமையுடன் கூறுகிறார். தோட்ட தொழிலாளர்களான அந்தோணி லக்ஷ்மன் ஈஸ்வரி தம்பதியினருக்கு 1984ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி, ராஜா  பிறந்தார். 

     கேரளா சட்டப்பேரவைக்கு முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கோயம்பத்தூர் சட்ட கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராக இருந்து வருகிறார்.  புதிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடுக்கி மாவட்டத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். மற்றும் அகில  வழக்குரைஞர் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 2009 முதல் தேவிகுளம் முன்சீப்  நீதிமன்றத்தில் வழக்குரைஞராக  பணியாற்றி வரும் ராஜா 2018 முதல் அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்றதும் அப்போது இருந்த மதராஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் அதிகம் வசித்து வந்த தேவிகுளம்  போன்ற சில பகுதிகள் கேரளா மாநிலத்தின் எல்லைக்குள் சென்றுவிட்டன. இன்றளவும் இந்த பகுதியில் தமிழர்கள் ஏராளமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment